‘குருந்தகம’ என்பதே குறுந்தூர் மலையாம்- நிரூபித்துக் காட்டவும் தயார் என்கிறார் மேதானந்த தேரர்

227 0

‘குருந்தகம’ என்பதே தற்போது குறுந்தூர் மலையாகியுள்ளதாகவும், இதனை தம்மால் நிரூபிக்க முடியுமென எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இணையவழி ஊடாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “வடக்கு கிழக்கில் காணப்படும் ஆயிரக்கணக்கான தொல்பொருள் ஸ்தானங்கள் தொடர்பாக நான் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்திருக்கிறேன்.

அவற்றில் 99 வீதமானவை பௌத்த மரபுரிமைகளுடன் தொடர்பு பட்டவையாகும். இந்நிலையில், குருந்தூர் மலை விவகாரத்தில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாடுகளை சர்வதேச ரீதியில் ஏற்படுத்தியுள்ளனர்.

‘குருந்தகம’ என்ற இடமே தற்போது குருந்தூர் மலையாகியுள்ளது. நான் அந்த இடத்திற்கு மூன்று தடவைகள் சென்றிருக்கிறேன். முதன்முறையாக அங்கு சென்ற போது தமிழ் மக்கள் எவ்வித பேதமும் இன்றி எம்மை வரவேற்றனர்.

அவர்களுடன் எந்த பிரச்சினையும் காணப்படவில்லை. அங்கு சென்று ஆராய்ந்தபோது அதிகளவான தொல்பொருள் சான்றுகளைக் கொண்டவொரு இடமாக அது இனங்காணப்பட்டது.

1905 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஒருவரால் செய்யப்பட்ட ஆராய்விலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்பது நிரூபிக்கப்பட்டது. இதனைப் போன்று பல ஆங்கிலேயர்களால் ஆராய்வு செய்யப்பட்டு, அவற்றிலும் இது பௌத்த மரபுரிமைக்குரியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த இடத்திற்கு நீண்ட வரலாறு உள்ளது. அத்தோடு பொலன்னறுவை இராசதானி காலத்தில் பௌத்த மன்னர்களால் இந்த இடம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் காணப்படுகின்ற மலைகள், பௌத்த விகாரைகளை அடிப்படையாகக் கொண்டவையாகும். அவற்றில் பல விகாரைகள் இடிக்கப்பட்டு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

ஆனாலும், அவற்றை உடைக்குமாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் கூறவில்லை. பொலன்னறுவையிலும் இதுபோன்று அமைக்கப்பட்டுள்ள சிவன் ஆலயத்தை நாம் பாதுகாத்து வருகின்றோம். காரணம் இவை தேசிய உரிமைகளாகும். குருந்தூர் மலை பௌத்த மரபுரிமை என்பதை யாராலும் மறுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.