ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதியளிக்க வேண்டும்

208 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர மேன்முறையீடு செய்துள்ளதால் அவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள முடியும் என்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கூறியுள்ளார்.

அவ்வாறெனில் இரு தடவைகளை மேன்முறையீடு செய்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வலியுறுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பிரேமலால் ஜயசேகரவிற்காக தற்போதைய சபாநாயகர் புதிய பாராளுமன்ற கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளார்.

பிரேமலால் ஜயசேகர மேன் முறையீடு செய்திருப்பதால் அவர் பாராளுமன்றத்திற்கு வர முடியும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.

அவ்வாறெனில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்துகின்றோம்.

சபாநாயகர் தீர்மானங்களை எடுக்கும் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான வகையில் அமைய வேண்டும்.

எனவே 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சாதாகமான தீர்மானம் அறிவிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதால் , எதிர்க்கட்சி அந்த சட்டத்திற்கான பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளது.

மரண தண்டனை குற்றவாளிக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற கலாசாரத்தை தற்போதைய சபாநாயகரே அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே ரஞ்சன் விவகாரத்திலும் சாதகமான தீர்மானத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.