உடலில் மது சுரக்கும் நோய்

209 0

வாஷிங்டன்:உடலில் மது சுரக்கும் அரிய வகை நோயால், அமெரிக்க பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுதும், பெரும்பாலான மக்களுக்கு, மது அருந்தும் பழக்கம் உள்ளது. வார இறுதி நாட்கள், புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என, அனைத்து நிகழ்வுகளிலும், மது அருந்தி கொண்டாடுவதை, பலர் வழக்கமாக வைத்துள்ளனர்.மதுவுக்காக பலரும் ஏங்கும் இந்த காலத்தில், உடலில் மது சுரக்கும் அதிசய சக்தியை, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றுள்ளது, தற்போது தெரிய வந்துள்ளது.

கனெக்டிகட் மாகாணத்தில், சாரா லெபெப்வே, 38, வசித்து வருகிறார். இவர், ஏ.பி.எஸ்., எனப்படும், ‘ஆட்டோ பிரீவரி சிஸ்டம்’ என்ற, மிகவும் அரிதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால், இவர் உடலில், மது தானாகவே சுரக்கும். இதனால், அவர் மது அருந்தாமலேயே போதையாகி விடுவதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தான், இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது, சமீபத்தில் தான், சாராவுக்கு தெரிய வந்தது.

சாராவுக்கு, குடி பழக்கமே கிடையாது. அவர் மதுவை விரும்பாதவர். அப்படி இருக்க, இந்த நோயால், அவர் பல இன்னல்களை சந்தித்து வருகிறார். ஒரு முறை குடித்துவிட்டு கார் ஓட்டியதாக, போலீசாரிடம் சிக்கி உள்ளார்.மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் சாராவுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. எனினும், அவர் உடலில் தொடர்ந்து மது சுரப்பதால், அவருக்கு அறுவை சிகிச்சையை உடனடியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.