7 பேர் விடுதலை தாமதம்- பாஜக, கவர்னர், அதிமுக அரசின் கபட நாடகம்: வைகோ கண்டனம்

244 0

7 பேர் விடுதலையில் மத்திய பாஜக அரசும், தமிழக கவர்னரும், அதிமுக அரசும் கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை செப்டம்பர் 9, 2018 இல் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை 29 மாத கால தாமதத்திற்குப் பின்னர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து இருக்கிறார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 7 தமிழரின் விடுதலை குறித்து குடியரசுத்தலைவரே முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

தமிழக கவர்னரின் முடிவுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் பின்னணி இருப்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன்படி, சிறைக் கைதிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை உள்ளிட்டவற்றில் மாநில அரசுக்கு தங்கு தடையற்ற அதிகாரம் இருக்கின்றது என்பதை தொடர்ச்சியாக பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உறுதி செய்துள்ளன.

மாரூராம் எதிர் இந்திய அரசு வழக்கில் 1981-ம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் தலைமையிலான அமர்வு மிகத் தெளிவாக வழிகாட்டுதல் அளித்திருக்கின்றது.

மாரூராம் வழக்கில் ஏற்கனவே மரண தண்டனை குறைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதே மாநில அரசு விரும்பினால் அவரை விடுதலை செய்யவும் அதிகாரம் இருக்கின்றது என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை முன்மாதிரியாகக் கொண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு சட்டப்படி அதிகாரம் இருக்கின்றது.

அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 163 (1) இன்படி தமிழக அமைச்சரவையின் முடிவைச் செயல்படுத்தும் பொறுப்பு மட்டுமே கவர்னருக்கு இருக்கிறதே தவிர, கவர்னர் இதில் தனிப்பட்ட முடிவு எதையும் மேற்கொள்ள அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.

ஆனாலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், 7 தமிழர் விடுதலை பற்றி குடியரசுத் தலைவரே முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது அநீதியாகும்.

மத்திய பா.ஜ.க. அரசும், தமிழக கவர்னரும், அ.தி.மு.க. அரசும் இந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

நாட்டின் சட்டத்தையும், பாராளுமன்ற நெறிமுறைகளையும், ஜனநாயகத்தையும் ஏற்காமல், அலட்சியப்படுத்தி வரும் ஒரு கூட்டத்தின் கையில் அரசு அதிகாரம் சிக்கிக் கொண்டதன் விளைவை நாடு சந்தித்து வருகின்றது. மத்திய பா.ஜ.க. அரசு தமிழக கவர்னர், எடப்பாடி பழனிசாமி அரசு மூவர் கூட்டணியின் சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான அராஜகப் போக்கை தமிழக மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

எனவே 29 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.