பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இன்று முடங்கியது மலையகம்!

301 0

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி இன்று ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்திற்கு மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி மற்றும் மலையகத்தில் இயங்கும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமரின் பெருந்தோட்டத் துறைக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்ளேனத்திற்கும் இடையே பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறித்து இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளிலும் இணக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.

பின்னர் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் தொழிற்சங்கங்களுக்கும், பெருந்தோட்ட முதலாளிமார் சம்ளேனத்திற்கும் இடையில் இடம்பெற்றிருந்த கலந்துரையாடல்களிலும் இணக்கம் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான வேதன அதிகரிப்பு குறித்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சம்பள நிர்ணய சபையிடம் ஒப்படைத்திருந்தார்.

இதன்படி நாளை சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றை தினம் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.