சென்னை ஐகோர்ட்டில் 8-ந்தேதி முதல் நேரடி விசாரணை- தலைமை பதிவாளர் அறிவிப்பு

281 0

சென்னை ஐகோர்ட்டு, மதுரை கிளையில் வருகிற 8-ந் தேதி முதல் நேரடி விசாரணை தொடங்கப்படும் என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை மற்றும் கீழ் கோர்ட்டுகளில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக காணொலி காட்சி மூலமாகவே விசாரணை நடந்து வருகிறது.

வருகிற 8-ந் தேதி முதல் கீழ்கோர்ட்டுகளில் நேரடி விசாரணை தொடங்கும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. தற்போது அதே தேதியில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகியவற்றில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி நேரடி விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 8-ந் தேதி முதல் நேரடி விசாரணையை மேற்கொள்ள ஐகோர்ட்டு நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது. நேரடி விசாரணையை பொறுத்தமட்டில் இறுதி விசாரணையில் இருக்கும் வழக்குகள் மட்டுமே பட்டியலிடப்படும்.

காலை, மாலை என இரு வேளைகளில் விசாரணை நடைபெறும். மற்ற வழக்குகள் அனைத்தும் காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும். வக்கீல்கள் விரும்பினால் இறுதி விசாரணை தொடர்பான வழக்குகளில் காணொலி காட்சி மூலமாகவும் ஆஜராகலாம். மனுக்களை தாக்கல் செய்யும் இடங்களில் ஒரே நேரத்தில் 5 வக்கீல்கள் அல்லது குமாஸ்தாக்கள் அல்லது மனுதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஒரு மணி நேரத்திற்கு 5 வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும். ஒரு வழக்கு விசாரணைக்கு 2 வக்கீல்கள் வீதம் அறையின் பரப்பளவை பொறுத்து 6 முதல் 10 வக்கீல்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மற்ற வக்கீல்கள் காத்திருக்க வேண்டும். வழக்கு விசாரணை முடிந்ததும் வராண்டாவில் நிற்காமல் வெளியேறி விட வேண்டும்.

வக்கீல் அறைகளை பொறுத்தவரை சுத்தப்படுத்தவும், கிருமி நாசினி தெளிக்கவும் அறைகள் திறக்கப்பட்டு உடனடியாக மூடப்படும். மீண்டும் அறைகளை திறப்பது தொடர்பாக இம்மாதம் (பிப்ரவரி) இறுதியில் முடிவு எடுக்கப்படும்.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள உணவகங்களை பொறுத்தவரை அரசு வகுத்துள்ள விதிகளின்படி திறந்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.