இலங்கைத்தீவில் தொடர் இனவழிப்புக்குள்ளாகிவரும் எமது மக்களுக்கு நீதிகோரி வடக்கு கிழக்கிலே எதிர் வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை, தொடர் போராட்டம் ஒன்றுக்கு வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் சிவில் செயற்பாட்டு அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதரவை தாயகத்தின் அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் வழங்குகின்றன.
குறிப்பாக வடக்கு கிழக்கில் தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன. தமிழ் மக்களின் கலை, பண்பாட்டு விழுமியங்களைப் பேணுகின்ற இடங்கள் “சிங்கள் பௌத்த தொல்பொருள் இடங்கள்” என்ற பெயரில் சூறையாடப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தில் தமிழர்களின் அடையாளத்தை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கு, கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைத்தி வருகிறார்கள்.
தமிழினப்படுகொலை செய்த படையினருக்கு பதவி உயர்வுகளை வழங்கியும் தண்டனை வழங்கப்பட்ட ஒரேயொரு இராணுவத்தினரை கூட, பொதுமன்னிப்பில் உடனடியாகவே விடுதலை செய்தும் வருகின்ற நிலையை ஐநா மனிதவுரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டுகிறார்.
மறுபக்கத்தில், சிறிலங்கா அரசானது பல வருடங்களாக வழக்குதாக்கல் இன்றியே தமிழ் அரசியல் கைதிகளை சிறையில் வைத்திருக்கிறது.
எமது தாயகத்தில் தொடர்ந்துவரும் இத்தகைய நெருக்கடியான சூழலில், பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் சார்பாக ஐ.நா மனிதவுரிமைப் பேரவையிலே அரசியற் கட்சிகளாலும் சிவில் அமைப்புகளாலும் ஒருங்கிணைக்கப்பட்டு எங்களுடைய மக்களுக்கான நிரந்தரமான தீர்வை பெறுவதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்ற பிரேரணையை வலுப்படுத்தும் முகமாக இப்போராட்டம் நடைபெறவுள்ளது.
இதே காலப்பகுதியில் தமிழர்கள் வாழும் புலம்பெயர்ந்த நாடுகள் அனைத்திலும் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்த வகையில், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் மெல்பேணிலும் எதிர்வரும் சனிக்கிழமை 06-02-2021 அன்று கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. தாயகமக்களின் நீதிக்கான ஆதரவை வெளிப்படுத்தியும் சிறிலங்கா சுதந்திரநாளென்பது தமிழர்களின் கரிநாள் என்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் சனிக்கிழமை 06-02-2021 அன்று மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கவனயீர்ப்பு நிகழ்வு சிட்னியில் நடைபெறவுள்ளது.
தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்விடம்: Parramatta Town Hall முன்பகுதி
தொடர்பு: 0401 842 780, 0424 757 814, 0402 169 364
இவ்வண்ணம்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – சிட்னி