தொழிலாரள் நலன் கருதி போராட்டத்திற்கு ம.ம.மு முழுமையான ஆதரவு

235 0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (03) காலை நுவரெலியாவில் அமைந்துள்ள மலையக மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன், தேசிய அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர். ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே. சுப்பிரமணியம், உப தலைவர் ஏ. லோரன்ஸ் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக இதனை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் எங்களுடன் கலந்துரையாடவில்லை என்றாலும் தொழிலாளர் நலன்சார்ந்து இந்த போராட்டம் நடைபெறுவதாலும் தொழிலார்களின் ஒற்றுமையையும் அவர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவுமே மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தீர்மானித்திருக்கின்றோம்.

மலையக மக்கள் முன்னணிக்கு போராட்டம் என்பது புதிய விடயமல்ல. நாம் பல போராட்டங்களை களத்தில் இருந்து முன்னெடுத்தவர்கள். அந்த வகையில் எந்த ஒரு போராட்டமும் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை. இதனை நாங்கள் நன்கு உணர்ந்தவர்கள்.

இன்று இந்த நாட்டில் பெரும் போராட்டமாக மாறியுள்ள துறைமுகம் தொடர்பான போராட்டத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தையே தங்களுடைய முடிவை மாற்றும் அளவிற்கு போராட்டம் வெற்றி பெற்றிருக்கின்றது என்றால் அதற்கு காரணம் துறைமுக தொழிற்சங்கங்கள் அனைத்தும் தங்களுடைய அரசியல் நிகழ்ச்சி நிரலை ஒரு புறம் வைத்துவிட்டு ஒரு இலக்கை நோக்கி இலட்சியத்துடன் போராட்டம் செய்தார்கள் அதனால் அவர்களுக்கு அது வெற்றி பெற்றுள்ளது. இந்த போராட்டம் சரியா? தவறா? என்பது வேறு விடயம். ஆனால் போராட்டத்தின் வெற்றிக்கு காரணம் தொழிற்சங்கங்களின் ஒற்றுமை.

இது போல எதிர்காலத்தில் பெருந்தோட்ட மக்களின் நன்மை கருதி முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்களில் நாங்கள் அனைவரும் எங்களுடைய அரசியல் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நாங்கள் பிரிந்து நின்றால் தொழிலார்களின் போராட்டம் வெற்றி பெற முடியாது.

இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அலுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதே. ஏனெனில் அரசாங்கமும் சம்பள நிர்ணய சபையும் இந்த சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க தயாராகவே இருக்கின்றார்கள். அதற்கு முட்டுக்கட்டை போடுகின்றவர்கள் கம்பனிகளே. எனவே, இந்த ஒருநாள் போராட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் ஒற்றுமையை கம்பனிகளுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

இதற்கும் கம்பனிகள் ஒத்துவராவிட்டால் தொடர்ச்சியாக நீண்ட ஒரு போராட்டத்தை சரியாக திட்டமிட்டு அனைவருடனும் கலந்துரையாடி முன்னெடுப்பதற்கும் நாங்கள் தயாராக வேண்டும். மலையக மக்கள் முன்னணியின் இந்த தீர்மானம் தொழிலாளர்கள் நலன்சார்ந்த விடயம் மாத்திரமே. வேறு எந்தவிதமான உள்நோக்கமும் எங்களிடம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவும் குறிப்பிட்டுள்ளார்.