அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை என்ற விடயத்தை உள்ளடக்குவதன் ஊடாகத்தான் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ,இவ்வாறான விடயங்கள் மீள நிகழாமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பரிகார ரீதியாக அரசியல் தீர்வு அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு தீர்வுகாணும் சூழல் ஏற்படும் என்று தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி: தற்போதைய அரசியல் சூழ்நிலை எவ்வாறு காணப்படுகின்றது?
பதில்: இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோதபாய ராஜபக்ஷ பதவியேற்று 1-1/2 ஆண்டுகளிலே மிக வேகமாக தமிழ் இனத்துக்கான இருப்பை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் பல முனைகளில் முடக்கி விடப்பட்டுள்ளன.குறிப்பாக அசுர பலத்துடன் அரசாங்கம் தமிழர் தாயகத்தை சிங்கள பௌத்த மயமாக்குவது உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விட மேலதிகமாக காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அதைப்போல காணாமல் ஆக்கப்பட்ட பிரச்சினையை அரசாங்கம் ஏறெடுத்து பார்க்காமலும் அதேபோல அரசியல் கைதிகளின் பிரச்சினையில் அரசியல் கைதிகளே இல்லையென சொல்லும் அளவுக்கு அகம்பாவத்துடன் இந்த அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருப்பதே தற்போதைய சூழ்நிலையாகும்.
கேள்வி: இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தரப்பினர் எவ்வாறு செயற்பட வேண்டுமென கருதுகின்றீர்கள்?
பதில்:அரசாங்கம் அசுர பலத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஒட்டுமொத்த ஈழத் தமிழ் இனமும் ஓன்றுபட வேண்டிய கட்டாய தேவை எழுந்துள்ளது.தனி மரம் தோப்பாகாது என்பது போல எங்களுடைய கூட்டு நடவடிக்கைதான் இனத்தை காப்பாற்றும் என்ற அடிப்படையிலே நாங்கள் செயற்பட வேண்டிய வேளை வந்து விட்டது.
கேள்வி:ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு கோரிக்கை வைத்தது போல நீங்கள் மேலே குறிப்பிட்ட தமிழ் மக்கள் முன்னால் உள்ள சவால்களை தமிழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படும் சூழ்நிலை உள்ளதா?
பதில்:கடந்த காலங்களில் தியாக தீபம் திலீபனின் விடயத்தில் தமிழ் தேசிய மூன்று பிரதான அணிகளின் கூட்டுகளும் இணைந்து செயற்பட்டது.ஆனால் அதன் பின்னர் வந்த மாவீரர் நாள் , தற்போதுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு பிரதான மூன்று அணிகளும் கூடவில்லை.
இது மாத்திரம் அல்ல , அரசியல் தீர்வு விடயத்திலும் தனித்தனியேயும் தீர்வு யோசனை கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்பொழுது தொல்பொருள் திணைக்களம் , மகாவலி , வன திணைக்களம் , வன ஜிவராசிகள் திணைக்களம் போன்ற பல திணைக்களங்கள் மூலம் தமிழர் தாயகத்தை அபகரிப்பதற்கும் வாழ்வுரிமையை அழிப்பதற்குமான செயற்பாடுகள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார்,முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் சூழ்நிலையில் எவ்வாறு இதனை எதிர்கொள்வது என்பது தொடர்பில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று கூடி சந்தித்துப் பேசின.இந்த கூட்டத்தின் போது நடவடிக்கை குழுவொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டது.
இந்த 10 தமிழ் தேசிய கூட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர ஏனைய கட்சிகள் பங்கு கொண்டிருந்தன.எதிர்காலத்தில் அக் கட்சியும் இணையுமென நம்புகின்றோம்.அவர்களுக்கான கதவு திறந்தே இருக்கும்.
கேள்வி:இம்முறை ஜெனீவா அமர்வு தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:ஜெனீவாவை பற்றி சுருக்கமாக கூறுவதானால் 2009 மே 27 ஆம் திகதி இலங்கையை பாராட்டி ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.ஆனால் 2012 லிருந்து அமெரிக்காவினால் போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அமெரிக்கா பிரயத்தனப்பட்டு வாக்கெடுப்பு மூலம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதை தொடர்ந்து தான் இலங்கைக்கான விசாரணை அலுவலகம் நிறுவப்பட்டது.அந்த அலுவலகத்துக்கு ஆறு மாதத்தில் விசாரணை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.
2015 மார்ச் கூட்டத் தொடரிலே அந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகர் சமர்பிக்க இருந்த சூழ்நிலையிலேயே 2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த அறிக்கையை சமர்ப்பிக்க இலங்கை அரசு மேலும் 6 மாத கால அவகாசத்தை உயர்ஸ்தானிகரிடம் கேட்டது.அதன்படி அவகாசம் வழங்கப்பட்டது. 2015 செப்டெம்பரில் அறிக்கை வெளியாகிய போது பாரதூரமாக போர் குற்றங்கள்,மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் இலங்கை அரச படைகளால் புரியப்பட்டது என வெளிப்பட்டது.
இதனை தொடர்ந்து 2015 செப்டெம்பர் கூட்டத் தொடரில் சர்வதேச விசாரனை தேவையென்று அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணைக்கு இலங்கை திருத்தங்களை சமர்ப்பித்து வெளிநாட்டு பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணையை முன்னெடுப்பதென மாற்றி அமைத்து இலங்கை இணை அனுசரனை வழங்கி 30/1 தீர்மானம் நிறைவே ற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் உள்ள விடயங்களை நிறைவு செய்வதற்கு1-1/2 ஆண்டுகள் கால அவகாசம் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம்இலங்கையால் எடுக்கப்படும் முன்னேற்றம் குறித்து முதல் 9 மாதத்தின் பின்னர் உயர்ஸ்தானிகர் அதாவது 2016 ஜீன் கூட்டத் தொடரில் ஒரு வாய் மூல அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அடுத்த ஒன்பது மாதம் கழித்து அதாவது 2017 மார்ச்சில் இறுதி அறிக்கையை சமர்பிப்பதெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2017 மார்ச் மாதத்திலும் இலங்கை அரசாங்கம் 30/1 தீர்மானத்தை அமுல்படுத்தாததால் 34/1 என்ற புதிய தீர்மானம் முலம் இரண்டு ஆண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதில் ஓர் ஆண்டு முடிவில் ஒரு வாய் மூல அறிக்கையும் இரண்டாவது ஆண்டு முடிவில் இறுதி அறிக்கையையும் என்ற நிபந்தனையுள்ளது.
2019 மார்ச் மாதத்திலும் கூட இலங்கை அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்காத காரணத்தால் மீண்டும் 40/1 தீர்மானத்தின் பிரகாரம் இரண்டு ஆண்டு கால மேலும் அவகாசம் வழங்கப்பட்டது.இரண்டாண்டு கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடருடன்முடிவடைகின்றது.
இதனால் புதிய பிரேரணையை கொண்டு வரவேண்டிய தேவை எழுந்துள்ளது.அந்த பிரேணையிலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை போன்றவற்றை நாடுகள் வலியுறுத்த வேண்டுமென்று உயர்ஸ்தானிகர் தன்னுடைய அறிக்கையிலேயே தெரிவித்துள்ளதாக கசியவிடப்பட்டுளள தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எப்படி இருந்தாலும் பெப்ரவரி 22 ஆம் திகதி 46 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் 23ஆம் திகதி அளவிலேயே உயர்ஸ்தானிகரால் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து இலங்கை விவகாரத்தை கையாளும் பிரிட்டன் தலைமையிலான 5 நாடுகள் கொண்ட இணை தலைமை நாடுகள் வேறு சில நாடுகளையும் சேர்த்துக் கொண்டு முன்வைக்கப்படவுள்ள பிரேரணையில் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரின் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது தான் எமது உறுதியான கோரிக்கை. அதிலே சில மாற்றங்கள் ஏற்படலாம்.ஆதரவை வென்றெடுப்பதற்காக 47 நாடுகளிடையே வாக்கெடுப்புக்கு செல்லும் போது ஆகக்குறைந்தது 24 நாடுகளின் ஆதரவு தேவை. .
அரசாங்கம் தற்போது இன ,மத ரீதியாகவுள்ள சிறுபான்மையினர் மீது நடந்து கொள்ளும் மோசமான செயற்பாடு ஐ.நா கூட்டத் தொடரில் பலத்த எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதேபோல ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை என்ற விடயத்தை உள்ளடக்குவதன் ஊடாகத்தான் இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைப்பதற்கும் ,இவ்வாறான விடயங்கள் மீள நிகழாமைக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பரிகார ரீதியாக அரசியல் தீர்வு அதேபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம், காணாமல் போனோர், அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு தீர்வுகாணும் சூழல் ஏற்படும்.இதைத்தான் வலியுறுத்துகின்றோம்.