தேனி மாவட்டத்தில் தினந்தோறும் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்படும் சுவரொட்டி- அ.தி.மு.க.வில் பரபரப்பு

270 0

தேனி மாவட்டத்தில் தினந்தோறும் சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி வருவதால் கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக டாக்டர்கள் அறிவுரைபடி தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த வாரத்தில் அவர் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். ஆரம்பத்தில் 2 பேரை மட்டும் கட்சியில் இருந்து நீக்கிய அ.தி.மு.க. தலைமை அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

தற்போது பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் குரல் கொடுத்து வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் கட்சியினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டியில் அ.தி.மு.க. நிர்வாகி சின்னராஜா போஸ்டர் ஒட்டினார்.

நேற்று தேனியில் சாந்தகுமார் என்ற நிர்வாகி போஸ்டர் ஒட்டினார். இன்று ஆண்டிபட்டியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ‘‘தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் ஜெயலலிதாவின் புனித அவதாரமே’’ என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது.

தேனி மாவட்டத்தில் தினந்தோறும் ஏதேனும் ஒரு பகுதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி வருவது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.