சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று காலை நிகழ்வொன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.பி.மங்களராஜா, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கடந்த கால ஆட்சியிலும் நல்லாட்சியிலும் உள ரீதியான ஆலோசனை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த போது, ஷெல் வீச்சுக்களால் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களை நேரில் பார்த்த சிறுவர்கள் இன்றுவரை அந்தப் பாதிப்புக்களில் இருந்து மீள முடியாது, உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்கால சூழலில் பௌத்தர்கள் இல்லாத தமிழர் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பது நல்லிணக்கத்திற்கு சவாலான விடயம் என யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.பி. மங்களராஜா தெரிவித்தார்.
இதேவேளை, பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் அச்சமடைவதாகவும் அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வன்னிவிழாங்குளம் பிரதேசத்தில் கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகி, உயிரிழந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை கருணாரட்ணத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்டம் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.பி. மங்களராஜா, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.