சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும்! – பாதுகாப்பு செயலாளர்

266 0

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் ;வியாழக்கிழமை 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதன் போது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேசிய கொடியை ஏற்றும் போது சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு ;இன்று திங்கட்கிழமை இணையவழியூடாக நடைபெற்றது.

இதன் போது ‘இம்முறையும் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் தான் இசைக்கப்படுமா?’ என்று ஊடகவியலாளர்களால் கேட்க்கப்பட்ட போது பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

சுதந்திர சதுக்கத்திற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வந்ததன் பின்னர் அவரால் தேசிய கொடி ஏற்றப்படும். அந்த சந்தர்ப்பத்தில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை இசைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சுதந்திர தினத்தன்று காலை 6.30 மணிக்கு சகல மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் சர்வமத வழிபாடுகள் நடைபெறும்.

சுதந்திர தினத்தன்று காலை 07.00 மணிக்கு கொழும்பு மாநகர மேயர் றோசி சேனாநாயக்க , முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய , அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் காமினி லொக்குகே ஆகியோரின் பங்குபற்றலுடன் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.

இம்முறை நடைபெறவுள்ள முப்படையினரின் மரியாதை அணிவகுப்பில் 3171 இராணுவத்தினரும் , 808 கடற்படையினரும் , 997 விமானப்படையினரும் , 664 பொலிஸாரும் , 432 விசேட அதிரடிப்படையினரும் , 558 சிவில் பாதுகாப்புபடையினரும் , 336 தேசிய மாணவர் படையினரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணி வகுப்பு இடம்பெறும். இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசாரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இவை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு அணிவகுப்பில் பங்குபற்றுகின்ற சகலருக்கும் பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் யாருக்கேனும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களும் , அவர்களுடன் முதலாம் நிலையில் தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு பதிலாக இரண்டாம் நிலையில் தயார்நிலையில் உள்ளவர்கள் உள்வாங்கப்படுவர். எனவே அணிவகுப்பின் போது எவ்வித சிக்கலும் ஏற்படாது.

இம்முறை கொவிட் அச்சுறுத்தல் காணப்படுவதால் பொது மக்களுக்கு நேரடியாக கொண்டாட்டங்களை கண்டுகளிப்பதற்கு வாய்ப்பளிப்பதில் சிரமங்கள் காணப்படுவதால் , தொலைக்காட்சி நேரலையூடாக அவற்றை பார்வையிடுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.