ஜே.ஆர். சாயலில் பழிவாங்கும் கோட்டாபய – ரில்வின் சில்வா

250 0

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன செய்தவற்றையே தற்போதுள்ள  கோட்டாபய ராஜபக்ஷவும் செய்கின்றார்.

1978 இல் நீதிமன்ற அதிகாரங்களையுடைய ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா உள்ளிட்டோரது குடியுரிமையை நீக்கி தனக்கு எதிரானவர்களை ஜே.ஆர்.ஜெயவர்த்தன பழிவாங்கியதைப் போன்று தற்போது கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கெதிரானவர்களை பழிவாங்கலுக்குட்படுத்துகின்றார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

ராஜபகஷக்களையும் அவர்களுக்கு நெருக்கமானவர்களையும் 79 வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறும் வழக்குத் தாக்கல் செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இது வழமையான விசாரணை ஆணைக்குழுக்களுக்கும் அப்பால் தண்டனை வழங்கும் ஆணைக்குழுவாகச் செயல்பட்டுள்ளது.

இது அபாயமுடையதாகும். விசாரணை ஆணைக்குழுவுக்கு தண்டனை வழங்க முடியாது.

எனவே ஆணைக்குழு மூலம் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் நீதிமன்றத்தில் அதனை நிரூபிக்குமாறு சவால் விடுகின்றோம்.

வழக்குகளிலிருந்து விடுவிப்பது மாத்திரமின்றி வழக்குத் தொடர்ந்தவர்களை பழிவாங்குவதும் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதன் இலக்காகும். எனவே ஜனாதிபதி கோட்டாபய நியமித்த ஆணைக்குழுவை ‘அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஆணைக்குழு’ என்று கூறுவதைவிட ‘அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு’ என்று கூறுவதே பொருத்தமானதாகும்.

கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதிகாரங்களை அதிகரித்துக் கொள்வதற்காக சிலருக்கு இலஞ்சம் வழங்கி 20 ஆவது அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டமை மற்றும் தனது குடும்பத்தாரை வழக்குகளிலிருந்து விடுவித்ததைத் தவிர மக்களுக்காக எதனையுமே செய்யவில்லை எனத் தெரிவித்தார்.