மலையக பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

284 0

மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும், மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 30 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மேலும் அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் சமூகமளிக்கின்ற போதிலும், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர் இன்னும் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கின்றது.

சமூக இடைவெளியை பேணுவதற்காக ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக கல்வி நடவடிக்கை இடம்பெறுகின்ற நிலையிலும், 100 சதவீத வருகை இன்னும் உறுதியாகவில்லை.

குறிப்பாக ஹற்றன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹற்றன் ஶ்ரீபாத சிங்கள பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் இன்று (திங்கட்கிழமை) ஆறு மாணவர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே வருகை நன்றாகவே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.