யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகத்தை வடக்கு மாகாண கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலக திறப்பு விழா ஓய்வுநிலை வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
மங்கலவிளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
முதலில் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலகத்தின் பெயரப்;பலகையைத் வடக்கு மாகாண கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா திரைநீக்கம் செய்து வைத்து அலுவலகத்தை நாடாவெட்டித் திறந்துவைத்தார்.
நிகழ்வின் வரவேற்புரையை சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய செயலாளரும் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமாகிய ச.சிவனேஸ்வரன் நிகழ்த்தினார், நிகழ்வின் ஆசியுரையை முன்னாள் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி அதிபர் கலாநிதி ஆறுதிருமுருகன் வழங்கினார், பேராசிரியர் மா.சின்னத்தம்பி வாழத்துரை ஆற்றினார்.
தலைமையுரையைத் தொடர்ந்து வடக்குமாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், கல்வி கலாசார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.
கௌரவ விருந்தினராக தொழிலதிபர் ஈ.எஸ்.பி நாகரத்தினம் கலந்துகொண்டார்.
பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய உப செயலாளரும் நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபருமாகிய கலாநிதி எஸ்.சேதுராஜாவின் நன்றியுரையுடன் சிரேஸ்ட பள்ளிக் கல்வியாளர் ஒன்றிய அலுவலக திறப்பு விழா நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
நிகழ்வில் ஓய்வுநிலை அதிபர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பல கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.