வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் கந்தசாமி கோவிலில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சில விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இனந்தெரியாதோரால் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த ஐம்பொன்னாலான வேல் மற்றும் எழுந்தருளியில் இருந்த வள்ளி மற்றும் தெய்வானை விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளதுடன,; ஆலயத்தின் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தின் பிரதம குரு தெரிவித்தார்.
இதேவேளை வைரவர் சூலம் உடைக்கப்பட்ட போதிலும் அது திருடப்பட்டாத நிலையில் ஆலயத்தினுள்ளேயே காணப்பட்டுள்ளது.
மதியவேளைப் பூசை மட்டுமே இடம்பெறும் இவ் ஆலயத்தில் இன்று மதியம் 11 மணியளவில் பூசைக்காக ஆலயத்தை திறந்து பார்த்தபோதே, விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஓமந்தை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.