வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா

252 0

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவைக் களமிறக்கவேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்றுத் தீர்மானித்தது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல்குழு வவுனியாவில் நேற்றுக் கூடியது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிடவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்மொழிந்தார். சீ.வீ.கே.சிவஞானம் அதை வழிமொழிந்தார்.

இதன்போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. குறிப்பாக சுமந்திரன் இதன்போது வாயே திறக்காமல் மௌனமாக இருந்தார்.
எதிர்ப்பின்றி அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, இலங்கை தமிழ் அரசுக்கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவிய குழு மோதல்கள் முடிவுக்கு வரும் அறிகுறிகள் நேற்றைய கூட்டத்தில் தென்பட்டன.

குழு மோதல்களை முடிவுக்கு கொண்டு வர, மாவை- சுமந்திரன் மோதலை தீர்த்து வைக்க நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சி ஓரளவு பலனை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

நேற்றைய அரசியல் குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன், முன்னாள் செயலாளர் கி.துரைராசசிங்கம், எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட நான்கு பேர் சமுகமளிக்கவில்லை.

இந்தக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்ட போதும், முக்கியமாக மாவை- சுமந்திரன் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தென்பட்டன.

கடந்த தேர்தலுடன் எம்.ஏ.சுமந்திரன் தரப்புடன் செயற்பட்ட சி.சிறிதரன் இந்த முயற்சியை ஆரம்பித்தார். அநேகமாக, சிறிதரன் பேசிய சந்தர்ப்பங்களில் எம்.ஏ.சுமந்திரன் பேசவில்லை. சுமந்திரன் தரப்பின் பிழைகள் என்றும் சிலவற்றை சிறிதரன் சுட்டிக்காட்டினார். அப்போதும் சுமந்திரன் பேசவில்லை.

சுமந்திரன் தரப்பு குரலாக சிறிதரன் பேசியதாக ஊகிக்க முடிந்ததாக, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

இரண்டு தரப்பின் மோதல் பின்னணிக் காரணங்களை சிறிதரன் குறிப்பிட்டார். தலைமைக்கு எதிரான, விமர்சனக் கருத்துக்களை சுமந்திரன் பகிரங்கமாக பேசியது தவறு, அதேபோல தலைமையும் சில விடயங்களைக் கட்சிக்குள் ஆலோசித்து செயற்பட்டிருக்கவேண்டுமென்றார்.

அத்துடன், தானும் ஒரு தவறு செய்துவிட்டதாக சிறிதரன் தெரிவித்தார். கட்சித் தலைமையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பகிரங்கமாக கூறியது தவறானதுதான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் -என்றார்.

உட்கட்சி மோதல்களை முடித்து, ஒற்றுமையாக எதிர்வரும் காலங்களில் செயற்படுவதென்றும் கூட்டத்தில் கருத்துக்களை தெரிவித்தனர்.

மோதலை முடிவுக்கு கொண்டு வரும் இன்னொரு அஸ்திரத்தையும் சிறிதரன் வீசினார். எதிர்வரும் வட மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை களமிறக்குவதென்றும், அவரை வெற்றியடைய தாம் அனைவரும் முழு முயற்சி செய்வோம் என்றும் தெரிவித்தார்.

இதையும் சுமந்திரன் ஆட்சேபிக்கவில்லை. சிறிதரனின் கருத்தை சீ.வீ.கே.சிவஞானம் வழிமொழிந்தார்.

மாவை சேனாதிராசா தேர்தலில் போட்டியிடா விட்டால் நான் போட்டியிடுவேன் என கூறியிருந்தேன். ஆனால், மாவை சேனாதிராசாதான் வேட்பாளர் என்பதை நானே ஆரம்பத்திலிருந்து பிரேரித்து வருகிறேன்.

அவர் போட்டியிட்டால் அதை முழுமையாக ஆதரிப்பேன். அவரே வேட்பாளர் என்பதை நானும் ஆதரிக்கிறேன் என்றார் சிவஞானம். யாரும் அதை எதிர்க்கவில்லை.

அத்துடன், ஜெனீவா விவகாரம், சிவில் சமூகமென்ற பெயரில் விடுக்கப்பட்ட போராட்ட அறிவிப்பு பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை அடுத்த மாத இறுதிக்குள் கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது