கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவை ஐ.நாடுகள் சபை நிராகரிக்க வேண்டும்- சுமந்திரன்

246 0

கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் அடங்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவை, ஐக்கிய நாடுகள் சபை நிராகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டம் வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் எம்.எ.சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “வட.கிழக்கில் எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் தொடர்பாக நாம் உரையாடியுள்ளோம்.

தொல்லியல் திணைக்களம் மகாவலி, வனஇலாகா போன்ற திணைக்களங்கள் எமது மக்களின் நிலங்களை அபகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது. வழிபாட்டு தலங்களை மாற்றியமைக்கும் மோசமான செயற்பாட்டில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இவை தொடர்பாக நாம் ஆராய்ந்துள்ளோம். இவற்றிற்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் போராட்டம் ஒன்றை சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு எமது கட்சியும் ஆதரவு வழங்கும் என்பதை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறான விடயங்களில் எமது மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு கூட்டமைப்பிற்கு இருக்கிறது. இதற்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று தமிழரசுகட்சி சார்பில் கோரிக்கை விடுக்கிறோம்.

ஜெனிவா விடயத்தில் தமிழ் தேசியகட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் இருந்து எமது கோரிக்கைகளை 47 உறுப்புநாடுகளிற்கும் அனுப்பியிருப்பது சந்தோசமான விடயம்.

புதிய அரசாங்கம் ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியிருக்கிறது. அதற்கு எமது யோசனைகளையும் நாம் அனுப்பியிருக்கிறோம். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு தீர்வில்லாமல் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது அர்த்தமற்றது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

அதனை தீர்பதற்கான பல வரைபுகள் பல தடவைகள் செய்யப்பட்ட நிலையிலேயே இருப்பதை நினைவுபடுத்தியுள்ளோம். அந்த குழு இந்த மாதம் 20 ஆம் திகதி எம்மை சந்திப்பதற்கு ஒழுங்கு செய்துள்ளது. எனவே நேரடியாக சந்திக்கும்போதும் எமது நிலைப்பாடு பற்றி கூறுவோம்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை. அது ஒரு கேலிக்கூத்தான விடயம் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.

இது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு நாடகம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தினால் நாம் எவ்வளவோ தூரம் முன்னேறலாம். அவற்றை ஆராய்வதற்கு இன்னொரு ஆணைக்குழு தேவையே இல்லை. இதை மனித உரிமை பேரவை முற்றுமுழுதாக நிராகரிக்கும் என்று நம்புகிறோம்.

இலங்கையின் சுதந்திர தினத்தை நாம் தொடர்ந்து புறக்கணித்தே வந்திருக்கிறோம். கடந்த அரசாங்கம் சிறுநல்லெண்ண சமிஞ்சைகளை காட்டியபோது நாமும் அதில் கலந்துகொண்டோம். எனினும் அந்த அரசாங்கமும் எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்தே செயற்பட்டிருந்தது. எனவே தொடர்ந்து நாம் சுதந்திர தினத்தை புறக்கணிப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.