இன்னும் இரண்டாண்டுகளில் இலங்கைக்கு பெரும் ஆபத்து- சம்பிக்க

242 0

வெளிநாட்டுக் கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 7000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சர்வதேச கடன்களைச் செலுத்த வேண்டியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமான கடன் நெருக்கடிக்குள் இலங்கை தள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வெளிநாடுகளுடன் டொலர்களில் செய்யும் கணக்கு வழக்குகளை மூன்று மாத காலத்துக்குள் நிறுத்துமாறு சகல வங்கிகளுக்கும் மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது.

ஏனென்றால் வெளிநாடுகளிடம் டொலர்களில் பெற்றுக்கொண்ட கடன்களைச் செலுத்தவேண்டிய நிலையில் கடந்த ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எனவே நாட்டிலுள்ள சகல வங்கிகளில் இருந்தும் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத்தருமாறு மத்தியவங்கி தெரிவித்திருந்தது. இது நூறுக்கு ஒரு வீத வட்டிவீதத்தில் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் எந்தவொரு வங்கியும் ஒரு வீத வட்டிக்கு பணத்தை வழங்க முன்வரவில்லை. அதனால் 44 மில்லியன் அமெரிக்க டொலர்களையே அரசாங்கத்தால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

எனவே சர்வதேச கடனை இறக்குமதிக்காக வைத்திருந்த பணத்தில் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

அதேபோன்று ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டதால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

மத்திய வங்கியால் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சந்தைக்குக் கொடுத்ததன் மூலமாகவே இப்போது ரூபாவின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணமெல்லாம் நல்லாட்சி அரசாங்கத்தில் சேமிக்கப்பட்ட பணம் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறான பயணத்தை முன்னெடுத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. அரசாங்கத்துக்கு மிக நெருக்கடியான நிலைமையே இன்று காணப்படுகின்றது.

ஆனால் அரசாங்கத்தில் உள்ள எவருக்கும் இந்தப் பிரச்னைகள் விளங்கவில்லை எனத் தெரிவித்தார்.