கிழக்கு மாகாணத்தில் 14 ஆயிரத்து 10 தடுப்பூசிகள் சுகாதார துறையினருக்கு ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் தடுப்பூசி ஏற்றும் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் தினங்களுக்கு தொடரவுள்ளது. இதில் முதற்கட்டமாக சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் வருகின்ற 258 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
அதில், தற்போது சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள சுகாதார ஊழியர்களுக்கும் சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு என கிழக்கு மாகாணத்தில் 113 நிலையங்களில் இன்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாயிரத்து 670 தடுப்பூசிகளும் மட்டக்களப்பில் மூவாயிரத்து 400 தடுப்பூசிகளும் கல்முனை பிராந்தியத்தில் நான்காயிரத்து 870 தடுப்பூசிகளும் அம்பாறை பிராந்தியத்தில் மூவாயிரத்து 70 தடுப்பூசிகளும் ஏற்றப்படவுள்ளன.
இதேவேளை, தடுப்பூசியால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவதானித்துள்ளோம். அதேவேளை ஒவ்வொரு பிராந்தியத்திலும் விசேட குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அந்தக் குழு தொடர்ந்தும் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளது.
தற்போது தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்தின் பின்னர் இரண்டாவத தடுப்பூசி ஏற்றப்படும். அதேவேளை தடுப்பூசி மக்களைச் சென்றடைய பல மாதங்கள் ஆகும். எனவே பொதுமக்கள் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்து செயற்படவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.