அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித்துறையை காப்பாற்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமென பிரதமர் மோடியை கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பஞ்சாலைகளை தேசிய பஞ்சாலை கழகம் திறக்க மறுத்து வருவதால் அவை அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும் என்கிற அச்சம் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை ஆகிய நகரங்களில் சிறு, நடுத்தர அளவில் பஞ்சாலை தொழில்கள்கள் மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகின்றன. பருத்தி நூல் ஏற்றுமதி 39 சதவிகிதம் சரிந்திருக்கிறது.
ஆனால், தற்போது பருத்தி நூல் ஏற்றுமதி 33 சதவிகிதம் சரிந்திருக்கிறது. இதனால் 4.5 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு தருகிற ஜவுளி தொழில் கடுமையான பொருளாதார முடக்கத்திற்கு ஆளாகியிருக்கிறது. நாட்டில் வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக வேலை வாய்ப்பு வழங்குவதில் மிக முக்கியமான பங்கை ஆற்றி வருவது ஜவுளித்துறை.
கொரோனாவுக்கு முன்பு வரை செயல்பட்டு வந்த அரசு பஞ்சாலைகள் பொது முடக்கத்திற்கு பிறகு திறக்கப்படவில்லை. தொழிலாளர்களும், தொழிற்சங்கத்தினரும் என்.டி.சி. நிர்வாகத்தையும், ஜவுளித்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பியும், தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 7 ஆலைகளில் 3 மட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன.
மற்ற ஆலைகளை திறக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் தனியார் பஞ்சாலைகளுக்கு மறைமுக ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசின் ஆலைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்தியாவில் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 70 சதவிகிதமும், மொத்த ஏற்றுமதியில் 11 சதவிகிதமும், அந்நிய செலாவணி ஈட்டுவதில் 15 சதவிகிதமும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவிகிதமும் இத்துறை வழங்கி வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் தவறான ஜவுளி கொள்கை காரணமாக அதிகளவிலான வேலை வாய்ப்பையும், ஏற்றுமதியையும், அந்நிய செலாவணியையும் வழங்குகிற ஜவுளித்துறை நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு, காப்பாற்ற முடியாத சூழல் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
எனவே, பிரதமர் மோடிக்கு தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித்துறையை காப்பாற்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமென பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.