மைத்திரியின் மலேசியப் பயணத்துக்கு மலேசியத் தமிழர் கடும் எதிர்ப்பு!

300 0

949220318untitled-1சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவை மலேசியாவிற்குள் அனுமதித்தால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படும் என அந்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

எதிர்வரும் 15ஆம் திகதி சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மலேசியா பயணம் செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ் அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கான இந்தப் பயணத்தின்போது சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பல்வேறு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார். அத்துடன் சிறீலங்கா மக்களின் உணவு மற்றும் கலாச்சார விழாவையும் ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவின் பயணத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள மலேஷிய கட்சியொன்றின் உப தலைவர் ரோனி முருகன், நாட்டிலுள்ள தமிழ் சமூகத்தின் உணர்வுகளை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மைத்திரிபால சிறிசேனவின்மீதும் உள்ளதால் அவரை மலேசியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மலேசிய அரசசார்பற்ற நிறுவனங்களும் மைத்திரிபால சிறிசேனவின் மலேசியப் பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.