யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனிதத்தை அழிக்கிறார்கள்-பூசகர் குற்றச்சாட்டு

251 0

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதிக்கும் வகையில் வலி,வடக்கு பிரதேசசபை நடந்து கொள்வதாக ஆலய குருக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக ஓருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி காலத்தில் ஆலயத்தை சூழ 500 மீற்றருக்குள் எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாதென பணிப்புரை விடுக்கபப்ட்டிருந்தது.

இந்த நிலையில் ஆலயத்தை சூழவுள்ள காணிகளில் கட்டுமானங்கள் செய்யப்பட்டு, ஆலயத்தின் புனித தன்மையையும், பழமையினையும் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பூசகர் குறிப்பிட்டார்.

மேலும் வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனும் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாப்பேன் என கூறி இருந்த நிலையில் அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.

நிலமை இவ்வாறிருக்க பிரதேசசபை தொடர்ச்சியாக ஆலயத்தின் புனித தன்மை மற்றும் பழமையை பாதிக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

கீரிமலை தீர்த்தகேணியும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகி பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக ஆராயவும் துரித நடவடிக்கை எடுக்கவும் யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.