‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது- வைகோ

260 0

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ‘நம்ம சென்னை’ சின்னம் தமிழ்மொழியை அவமதிப்பதாக உள்ளது என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில், மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, நம்ம சென்னை என்ற அடையாளச் சின்னத்தை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.

இது அடையாள சின்னமாகத் தெரியவில்லை. மாறாக, நம் தாய்த் தமிழ் மொழியை அவமதிக்கும் சின்னமாக உள்ளது.

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் ரூ.24 லட்சம் செலவில் ராணி மேரி கல்லூரி அருகில், சென்னையின் பெருமை, மாண்பை கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள் தாங்களே சுய புகைப்படம் (செல்பி) எடுத்து, சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்திடவும் இந்தச் சிற்பத்தை அமைத்ததாகக் கூறப்படுகின்றது. இனி சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக திகழும்.

உலகின் பல நாடுகளிலும், டெல்லி, ஐதராபாத், பெங்களூரு நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிற்பங்களின் தொடர்ச்சியாகவும், இந்தச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் பெருமை பேசுகின்றது.

நாகரீக வளர்ச்சியில் உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக மொழிக்கலப்புக்கு அரசு துணை போகக் கூடாது. தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து ‘தமிங்கில’ மொழியில் எழுதக் கூடாது.

தமிழ் வளர்ச்சித்துறை என்ற துறையை உருவாக்கி, ஒரு அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நம் மாநிலத்தில் இப்படி தமிழைச் சிதைக்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது.

ஒரு புறம் மத்திய அரசால் புகுத்தப்படும் இந்தித் திணிப்பு, மறுபுறம் தமிழக அரசின் மொழிச் சிதைப்பு வேதனை அளிக்கின்றது.

டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தியில், தமிழ் மொழியை முற்றிலும் புறக்கணித்து, இந்தியில் மட்டுமே எழுதி இருந்தார்கள்.

எந்த ஒரு மொழியும் அழிந்து விடக் கூடாது. அவரவர் தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவன் என்கிற உணர்வில், இதுபோன்ற பிறமொழிக் கலப்பில் தமிழக அரசு ஈடுபடுவதைக் கண்டிக்கின்றேன்.

உலகத்தின் இணைப்பு மொழி தான் ஆங்கிலமே தவிர, தமிழ் மொழியுடன் கலப்பில் பிணையும் மொழி அல்ல என்பதை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உணர வேண்டும்.

சென்னையின் அடையாளமாகத் திகழும், நம்ம சென்னை சிற்பத்தில், ‘நம்ம சென்னை’ என தமிழில் முதலிலும், அடுத்து, சென்னை-தமிழ்நாடு என ஆங்கிலத்திலும் மாற்றி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.