அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் அதே வேளையில், பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டதை நினைத்து நான் அதிர்ஷ்டமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். வாய்ப்புகளைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன். தடுப்பூசி எல்லா இடங்களிலும் எல்லாருக்கும் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தீவிரமாக செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.