கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பின் எதிரொலியாக, மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசியாவிலும் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 5,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,03,933 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 16 பேர் பலியான நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 733 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று எதிரொலியால் மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
தைப்பூசத் தினத்தன்று பினாங்கு தண்ணீர்மலை ஸ்ரீ பால தண்டாயுத பாணி கோயில், சிலாங்கூரிலுள்ள பத்துமலைத் திருத்தலம் உள்ளிட்ட பிரசித்திப் பெற்ற கோவில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
கொரோனா நோய்த்தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. வீட்டிலிருந்தபடியே தைப்பூசத்தை இணையத்தில் காணுமாறு மலேசிய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால், மலேசியாவிலுள்ள முருகன் கோவில்களில் இந்த ஆண்டு பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் புடைசூழ மேள தாளத்துடன் வெள்ளி ரத ஊர்வலம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் நோக்கிச் செல்லும். ஒவ்வோர் ஆண்டும் இந்த வெள்ளி ரத ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்க்கம்.
இந்த ஆண்டு முதல்முறையாக பக்தர்கள் இன்றி அமைதியான முறையில் வெள்ளி ரதம் பத்துமலைத் திருத்தலம் சென்றடைந்தது.
இதேபோல், பினாங்கிலும் கடும் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு மத்தியில் தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் இல்லாமல் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடுவது வரலாற்றிலேயே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.