இலங்கையில் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

323 0
இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும், நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இலங்கையின் மோசமடையும் மனித உரிமை நிலவரத்தை கண்காணிப்பதற்கும் கடந்த கால சம்பவங்கள் குறித்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை புதிய தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மிகமோசமான குற்றங்களிற்கு தண்டனையின்மை பற்றிய இலங்கையின் அதிர்ச்சி உண்டாக்கும் வரலாறும் ராஜபக்ச அரசாங்கத்தின் இடம்பெறும் கவலை தரும் விடயங்களும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான இயக்குநர் ஜோன் பிசெர் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக மனித உரிமை பேரவை இலங்கைக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் தற்போது பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் பாரிய சர்வதேச குற்றங்களிற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்வதற்கும் சர்வதேசத்தின் அதிகரித்த தலையீடு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இலங்கை மனித உரிமை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை எந்தவித சந்தேகங்களுமின்றி தெளிவாக தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ள பிசர் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கும் சர்வதேச குற்றங்களிற்கு நீதி வழங்குவதை துரிதப்படுத்துவதற்கும் மனித உரிமை பேரவை வலுவான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.