அரசாங்கம் தலையிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்குகொடுக்குமாக இருந்தால் கூட்டு ஒப்பந்தத்தின் சம்பள பகுதியில் இருந்து தமது தரப்பு முழுமையாக விலகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஹற்றனில் ஊடகவியலாளர்களை சந்திந்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கம்பனிகளுக்கு அதிகமான அழுத்தங்கள் தற்போது பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த அரசாங்கத்தில் இந்த அளவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது. எனினும் கம்பனிகள் கொடுக்கமுடியாது என்ற விடாப்பிடியிலேயே இருக்கின்றனர்.
இந்நிலையில் சம்பள நிர்ணயசபை ஊடாக சம்பளத்தினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த விடயத்தினை அரசாங்கம் முன்னெடுத்தால் கூட்டு ஒப்பந்தத்திலும் சம்பளப் பேச்சுவார்த்தையிலும் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றோம்.
எனினும் கூட்டு ஒப்பந்தம் என்பது வெறுமனே சம்பளப்பேச்சுவார்த்தை மட்டுமல்ல. அதில் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் உரிமைகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தெரியாதவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
தொழிலாளர்களின் நலனில் எவராவது பொறுப்பேற்றால் நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலக தயார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.