கள்வர்களைப் புனிதர்கள் போன்று போற்றும் அவல நிலை – கரு ஜெயசூரிய

208 0

நாட்டில் மனித உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பில் மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒரு தனி நபருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்து இந்த நாட்டு மக்கள் அனைவரதும் உரிமையை ஒரு நபர் தீர்மானிக்கும் நிலை உருவாக்கியுள்ளது என முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இதேவேளை இனவாதத்தை தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னைகள் நாட்டினுள் உருவாகும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய நிலைமைகள், அரசியல் செயல்பாடுகள் மற்றும் புதிய அரசமைப்பின் தேவைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

தற்போது நாட்டில் உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால் தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன மத உரிமைகளை பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இப்போது பயணிக்கும் இந்தப் பயணம் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னைகளை நாட்டுக்குள் உருவாக்கப்போகின்றது. அவ்வாறு எதுவும் நடந்துவிடக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன். மக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சமூகத்திலே மக்கள் வாழ வேண்டும்.

ஒருவரது அடிப்படை உரிமையை தடுக்கும் உரிமை எவருக்கும் வழங்க முடியாது. ஆனால் இன்று மக்களின் அடிப்படை உரிமைகளை தடுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தகவல் அறியும் சட்டத்தையும் மீண்டும் தடைசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிய வருகின்றது. இதுகூட மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்பாடாகவே நான் கருதுகின்றேன். 20 ஆம் திருத்தத்தின் பிரதிபலிப்பே இவையாகும்.

நாம் ஒருபோதும் 20 ஆம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு தனி நபருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை கொடுத்து இந்த நாட்டு மக்கள் அனைவரதும் உரிமையை ஒரு நபர் தீர்மானிக்கும் செயல்பாடே இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஒருவர் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றே நினைக்கின்றேன்.

எனவே புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அரசியல் அமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும். 20 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசியல் அமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புக்களை சார்ந்தது. அடுத்த தேர்தலில் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும்.

இப்போது நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன், எனவே புதிய அரசாங்கத்தை உருவாக்கவோ, ஆட்சியை கவிழ்க்கவோ முயற்சிக்கவில்லை. மாறாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க போராடுகின்றேன். புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அதில் தமிழர், முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி தூய்மையான நாட்டை உருவாக்க வேண்டும். அதில் சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் சூழல் உருவாகும்.

இந்த நாட்டின் ஊடகச் சுதந்திரத்துக்கான நீண்டகாலப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியிருந்தது, 2014 ஆம் ஆண்டுகாலங்களில் எமது ஊடகவியலாளர்கள் பட்ட துன்பங்கள், அதுவரை காலமாக ஊடகவியலாளர்கள் பட்ட துன்பங்கள் நினைவில் உள்ளது.

அவர்களுக்காக நாம் துணைநின்று அவர்களுக்காக போராடினோம். இன்று மீண்டும் அதே கலாசாரம் உருவாகிக்கொண்டுள்ளது.

அதேபோல் ஊடகங்களும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக்கொண்டு மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

கள்வர்களைப் புனிதர்கள் போன்று போற்றும் நிலைமையும் உருவாகியுள்ளது. இவற்றையும் நிராகரிக்கப் போராடவேண்டியுள்ளது எனத் தெரிவித்தார்.