காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், மண்டைதீவு உள்ளிட்ட பல இடங்களில், கடற்படையினரின் தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், நில அளவைத் திணைக்களத்தால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு விரைந்த அரசியல்வாதிகளும், பொதுமக்களும், காணி உரிமையாளர்களும் இணைந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
மண்டைதீவில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போதும், வேலணைப் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போதும், போராட்டக்காரர்களை நேரடியாகச் சந்தித்த பிரதேச செயலாளர் சோதிநாதன், மக்களினது இத்தகைய எதிர்ப்புகள் காரணமாக, காணி அளவீட்டுப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
அத்துடன், இது தொடர்பில் காணி அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்படும் என்றும், இதற்கான பதில் வரும் வரையும் காணி அளவிடுதல் பணிகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும், அவர் அறிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நேற்று (25) காலை நடைபெற்ற நிலையில், காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், அளவீடுகள் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்காக நிலஅளவைத் திணைக்களத்தால் காணி அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு, குறித்த பிரதேச செயலாளர் தடையாக இருப்பதாகவும் அவரே தடுத்து நிறுத்தியதாகவும், அரச உயர் மட்டத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணத்தாலேயே, குறித்த பிரதேச செயலாளருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதேநேரம், வேலனை பிரதேச செயலாளர் பதவிக்கு, செட்டிகுளம் பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.