பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஐரோப்பிய ஓன்றியத்திடம் இலங்கை தெரிவிப்பு

212 0

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.

இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் கூட்டு ஆணைக்குழுவின் இருபத்தி மூன்றாவது சந்திப்பை நேற்று காணொளி காட்சி வாயிலாக நடத்தின.

இந்த சந்திப்பின்போதே இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அதனை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ற வகையில் மாற்றவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த ஏற்பாடுகளை மீளாய்விற்கு உட்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு, சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைகளை இலக்காகக் கொண்ட கொவிட் 19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் 22 மில்லியன் டொலர் மானியம் வழங்கியதற்கு இலங்கை இதன்போது நன்றி தெரிவித்தது.