இரண்டு புதுமண தம்பதியினருக்கு கொரோனா

222 0

ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகார பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு திருமண வைபவங்களின் இரண்டு புதுமண தம்பதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொது சுகாதார பரிசோதகர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்தார்.

பாதுக்கை வடருக்க பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபமொன்று மூன்று தினங்களில் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் இரண்டு இடங்களுக்கு அனுமதி பெறப்பட்டிருந்த போதும் வீட்டில் இடம்பெற்ற வைபத்திற்கு அனுமதி பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வைபவங்கள் கடுவெல, ரணால பிரதேசத்தின் வீடொன்றிலும் பாதுக்கை மீபே பிரதேசத்தின் ஹோட்டல் ஒன்றிலும் மற்றும் பாதுக்கை வடருக்க பிரதேச வீடொன்றிலும் நடாத்தப்பட்டுள்ளன.

முன்று வைபங்களின் பின்னர் குறித்த புதுமண தம்பதியினர் நுவரெலியாவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்த போது சுகயீனம் ஏற்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த திருமண வைபத்தில் கலந்து கொண்ட சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், மற்றைய புதுமண தம்பதியினர் ஹோமாகம பிடிபன பிரதேசத்தில் திருமண மண்டபமொன்றில் தமது திருமண வைபவத்தை வைத்துள்ள நிலையில் அவர்கள் இருவருக்கும் தென்பட்ட கொரோனா அறிகுறிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வைபத்தில் கலந்து கொண்ட 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.