2020ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தலைமை தாங்கும் மாற்று அரசு

288 0

sunil_handunettiஇரண்டு பிரதான கட்சிகளும் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்குத் தகுதியற்றவை என நிரூபித்துவிட்டதால் 2020ஆம் ஆண்டில் ஜே.வி.பி. தலைமை தாங்கும் மாற்று அரசு அரசு ஒன்றை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெறுகின்றன என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பிரதான இரண்டு கட்சிகளும் சேர்ந்து அமைத்த ஆட்சியால் இந்த நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை.

நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் நாம் கூறுகின்ற விடயங்களில் உள்ள உண்மை தாமதமாகத்தான் மக்களால் உணர முடிகின்றது.

நாம் சொல்வதை நம்ப மறுக்கின்றவர்கள் இப்போதைய அரசு செய்துகொண்டிருப்பதைக் கொஞ்சம் பார்க்க வேண்டும். மஹிந்தவின் ஆட்சியைப்போல் ஊழல்கள் நிரம்பி வழிகின்றன.

ஆகவே, நாம் 2020ஆம் ஆண்டு புதிய இலக்கை நோக்கி நகர வேண்டும். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பாரிய மாற்று சக்தி உருவாக்கப்பட வேண்டும். எமது நாட்டில் பலமான மனித சக்தி உண்டு. இந்த சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியலைப் புதுப்பிக்க வேண்டும் என்று நாம் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

நாம் தொடந்தும் ஊழல் அரசியல்வாதிகளை ஏசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.  இனியாவது சிந்திப்போம். நிலைமையை மாற்றுவோம். நாட்டைமுன்னேற்றுவதற்கு ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் , தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து முன்வர வேண்டும்.

எமது நாட்டில் உள்ள அனைவரினதும் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் இருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு தந்தை அரசியல் செய்ததற்காக – சகோதரர் அரசியல் செய்தமைக்காக – மாமா அரசியல் செய்தமைக்காக அவர்களின் உறவினர்களை – வாரிசுகளை ஆதரிக்கும் நிலைமை மாற வேண்டும்.

காலம் மாறிவிட்டது. நாமும் மாற வேண்டும். பழைய அரசியலை மாற்ற வேண்டும். நாடாளுமன்றில் இருந்து அந்த மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்திகள் நாடாளுமன்றம் வர வேண்டும். அவர்கள் இப்போது தனித்து நிற்கின்றார்கள். அதுதான் இங்கு பிரச்சினை.

இவ்வாறு தனித்து நிற்பவர்களுக்குத் தலைமைத்துவம் கொடுப்பதற்கு ஜே.வி.பி. தயாராக உள்ளது.

ஜே.வி.பியின் அரசாக அல்லாது ஜே.வி.பி. தலைமை தாங்கும் அரசு ஒன்று 2020ஆம் ஆண்டு நிச்சயம் உதயமாகும். அதில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.