இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்..!

227 0

சமூக வலைத்தளங்கள், இணையத்தளம் அடிப்படையிலமைந்த செயலிகள் மற்றும் கைத்தொலைபேசி ஊடாக பல வகையான நிதியியல் மோசடிகள் இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய மோசடிகளில் அநேகமானவை பொதுமக்களைக் கவருகின்ற வலைத்தளம் அல்லது கைத்தொலைபேசி செயலி அடிப்படையிலமைந்த இலகுக் கடன் திட்டங்கள் ஊடாகவே நடத்தப்படுகின்றன.

அவ்வாறான கடன் விண்ணப்ப மதிப்பீட்டுச் செயன்முறையின் போது, மோசடியாளர்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர் தகவல்களை பகிர்வதற்கு பொதுமக்களை தூண்டுகின்றமையால், அது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.

எவையேனும், அந்தரங்கத் தகவல்களை விசேடமாக பயன்பாட்டாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், பின் இலக்கம் எனப்படும் தனிப்பட்ட அடையாள இலக்கங்கள், ஒரு தடவை கடவுச்சொற்கள் அல்லது கணக்கு சரிபார்த்தலுக்குத் தேவையான எவையேனும் தகவல்களை எவரேனும் ஆளுடன் பகிரவேண்டாம்.

அத்துடன், பணம் கடன் வழங்குபவர்களுக்கு தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கான அணுகுவழிக்கு சம்மதிக்க வேண்டாம் என்றும் மத்திய வங்கி பொதுமக்களுக்கு ஆலொசனை வழங்கியுள்ளது.

மேலும், மத்திய வங்கியானது, தமது வங்கிகளிடமிருந்து அல்லது வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிடமிருந்து, குறுந்தகவல் விழிப்பூட்டல்கள் போன்ற நிகழ்நேர அறிவிப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களைக் கோருவதுடன், இதன்மூலம் அவர்களது கணக்குகளைப் பயன்படுத்தி இடம்பெறுகின்ற ஏதேனும் மோசடியான செயற்பாடுகள் பற்றி அவர்கள் உடனடியாக அறியக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.