கிளிநொச்சி கந்தன் குளத்து நீரைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை!

221 0

கிளிநொச்சி, கந்தன் குளத்தைப் பாதுகாக்க நீர்ப் பாசனத் திணைக்கள பொறியியலாளரின் ஆலோசனைக்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த குளத்தில் நேற்று பிற்பகல் முதல் நீர்க் கசிவைக் கட்டுப்படுத்த கமநல சேவைகள் திணைக்களமும், இராணுவத்தினரும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும், நீர்ப் பாசனத் திணைக்கள அதிகாரிகளும் குளத்தைப் பார்வையிட்டனர்.

அத்துடன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளார் த.ராஜகோபு தலைமையில் நீர்க் கசிவைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், குறித்த நீர் வெளியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில், வலது கரை துருசு திறந்துவிடப்பட்டதுடன் அதிகாரிகளின் கண்காணிப்புடன் குளத்தின் வால் கட்டுப் பகுதி வெட்டி விடப்பட்டுள்ளது.

எனவே, நீர் வடிந்தோடுவதால் தாழ் நிலப் பகுதி மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தமது விவசாயம் பாதிக்கப்படலாம் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.