சிதம்பரத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடிய விடிய போராட்டம்

224 0

அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்ககோரி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி 2013-ம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியை தமிழக அரசு ஏற்றபின்பும் மாணவர்களிடம் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல் தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதை கண்டித்தும் கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் 43 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முதலாமாண்டு பல் மருத்துவம் தவிர்த்து மற்ற இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ கல்லூரி நேற்று முதல் காலவரையின்றி மூடப்படுவதாகவும் மாணவர்கள் கல்லூரி மற்றும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன் அறிவிப்பு வெளியிட்டார்.

அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவியர் விடுதியில் உணவுக்கு பணம் செலுத்தி உள்ளோம். வெளியில் செல்ல மாட்டோம் என தெரிவித்து கலெக்டரை சந்திக்க கடலூருக்கு வந்தனர். கடலூரில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரியை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது மாணவர்கள் கூறுகையில், தமிழக அரசுடனும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்துடனும் பேசுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் கல்லூரி கால வரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று மாணவர்கள் கூறினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டதால் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்களை வெளியேற வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஆனால் மாணவ-மாணவிகள் விடுதியை விட்டு வெளியேற மறுத்து விடுதி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தங்களது கோரிக்கை நிறைவேறும்வரை கல்லூரியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.