அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத் தருவதாக உறுதியளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வாக்குறுதி என்னானது என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் இறுதியிலாவது ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு கிடைக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, தொடர்ந்தும் தெரிவித்த அவர், “பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாளாந்த கொடுப்பனவு விடயத்தில், இந்த நாடாளுமன்றத்தில் 2020 பெப்ரவரி மாதம், 27/2 இன்கீழ் கேள்வி கேட்ட வேளையில் 2020 மார்ச் மாதத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என பிரதமரும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரும் வாக்குறுதி வழங்கினர்.
தோட்ட கம்பனிகளின் அனுமதி இருந்தாலும் இல்லாது போனாலும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.
எமது நாட்டில் சம்பிரதாயம் ஒன்றும் உள்ளது என்னவெனின் பிணத்திற்கு முன்னாள் வாக்குறுதி ஒன்றினை வழங்குவது சத்தியபிரமாணம் செய்வதற்கு சமமானது.
அவ்வாறே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்னாள் நின்றுகொண்டு பிரதமர் மக்களுக்கு சத்தியம் செய்தார்.
தொண்டமான் என்னை இறுதியாக சந்தித்த வேளையில் ஆயிரம் ரூபாய் குறித்தே பேசினார் எனவும் பிரதமர் கூறினார். அதன் பின்னரும் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் பொய்யான வாக்குறுதிகளாகவே மாற்றப்பட்டு வருகின்றது.
இந்த மாதம் இறுதியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்குமா என அரசாங்கத்தை கேட்கிறேன்” அவர் மேலும் தெரிவித்தார்.