பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் புகைகளால் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐநா சபையின் முயற்சியால் பாரிஸ் ஒப்பந்தம் கையொப்பமானது. இதில் முதலில் கையெழுத்திட்ட அமெரிக்கா பின்னர் விலகியது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வந்தார். தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாகவும், உலக அளவில் காற்று மாசுவை குறைக்க தான் முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக் கொண்டார். வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ஜோ பைடன் தனது பணிகளை தொடங்கினார்.
இந்நிலையில், அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.