10, 12-ம் வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றுக்கு இடையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன.
அதனை பின்பற்றியே நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான பரிசோதனை முடிவுகள் 2 நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளது. ஒரு பள்ளிக்கு 2 சுகாதாரத்துறையைச் சார்ந்த ஊழியர்கள் நேரில் சென்று கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். மாணவர்கள் மட்டுமல்லாது, பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இந்த பரிசோதனை நடத்தப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த இந்த கொரோனா பரிசோதனையை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேரில் சென்று நேற்று பார்வையிட்டார். இதேபோல், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இனி வரக்கூடிய நாட்களில் சுகாதாரத்துறை மூலம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது என்றும், இவ்வாறு பரிசோதனை நடத்தப்படுவதன் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பள்ளிகளுக்கு வருவார்கள் என்றும் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.