கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் நள்ளிரவு வேளையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த நிலை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
நேற்று வழமைபோன்று தாங்கள் நித்திரைக்கு சென்றதாகவும் இரவு 12 மணியளவில் பலத்த சத்தத்துடன் கடலில் சத்தம் கேட்டதாகவும் அதன்பின்னர் கடல் நீர் தங்களது வீடுகள் இருக்கும் இட்த்தினை நோக்கி வருவதனையும் கண்ட நாங்கள் தங்களது குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வேறு உயர்வான பிரதேசங்களை நோக்கி சென்றதாகவும் அந்த மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதே போன்றுதான் இன்னுமொருவர் கருத்து தெரிவிக்கையில்
தாங்கள் படுத்திருக்கும் போது கடலில் இரைச்சலுடன் அதிக சத்தம் கேட்டதாகவும் அதன்பின்னர் தமது வீட்டிற்குள் கடல் நீர் உட்புகுந்து விட்டதாகவும் அதன்பின்னர் தாங்கள் எமது வீட்டை விட்டு வேறு இடத்திற்கு சென்றதாகவும் கூறினார்.
நேற்று கல்முனை மாமாங்கப்பிள்ளையார் ஆலயம், மற்றும் விஸ்ணு ஆலயம் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது பாதுகாப்பு கருதி தங்களது பிள்ளைகளுடன் தமது வீட்டில் இருந்து வெளியேறி உயர்வான பிரதேசத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த மக்கள் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியினால் தங்களது உறவுகளையும், உடமைகளையும் இழந்து வாழ்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.