அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு – கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவியை ஏற்கிறார்

241 0

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக தேர்வானார்.

அமெரிக்க சட்டப்படி நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் நபர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்பது வழக்கம்.

நாடாளுமன்றம் முன்பு ஆயிரக்கணக்கான தேசியக்கொடிகள்

அந்த வகையில் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

பொதுவாகவே பதவியேற்பு நாளில் விரிவான பாதுகாப்பு திட்டங்கள் இருக்கும். அதுவும் கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நடைபெற்ற வன்முறைக்கு பிறகு பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின்போது டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் தலைநகர் வாஷிங்டனில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக வாஷிங்டன் முழுவதும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவின் பாதுகாப்பு திட்டங்களுக்கான ஏற்பாடுகளை ரகசிய சேவை கையில் எடுத்துள்ளது. இதையொட்டி வாஷிங்டன் முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக இந்த பதவியேற்பு விழாவின்போது வாஷிங்டனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தருவர். 2009-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா முதல்முறையாக பதவியேற்கும்போது 20 லட்சம் பேர் வருகை தந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்தமுறை கொரோனா தொற்று காரணமாக கொண்டாட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்க மக்கள் பதவியேற்பு விழாவை காண தலைநகருக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என ஜோ பைடனின் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் கடந்த 6-ந்தேதி நடைபெற்ற சம்பவத்திற்கு பிறகு வாஷிங்டன் அதிகாரிகளும் இதே கோரிக்கையை விடுத்தனர்.

கடந்த காலங்களில் இந்த நிகழ்ச்சியை காண சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் வரை வழங்கப்படும். ஆனால் தற்போது கொரோனா தொற்று காரணமாக அது 1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அமைதியாக நடைபெறும் பதவியேற்பு விழாவின் பாரம்பரிய வழக்கமான ராணுவ தளபதி படைகளை பார்வையிடுதல் நிகழ்ச்சி இந்த முறையும் நடைபெறும்.

ஆனால் வழக்கமாக நடைபெறும் ராணுவ அணிவகுப்பு, `இணைய அணிவகுப்பாக’ அமெரிக்கா முழுவதும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டையும் போல இந்த ஆண்டும் நட்சத்திர விருந்தினர் நிகழ்ச்சி நடைபெறும். ஜோ பைடனின் ஆதரவாளரான அமெரிக்க பாடகி லேடி காகா தேசிய கீதம் பாடுவார். நடிகை ஜெனிபர் லோபசின் பாடல் நிகழ்ச்சியும் உண்டு.

பைடனின் பதவியேற்புக்கு பிறகு அமெரிக்க நடிகர் டாம் ஹான்க் 90 நிமிட நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குகிறார்.

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களுக்கான நேரப்படி காலை 11.30 மணியளவில் (இந்திய நேரப்படி இரவு 10 மணி) பதவி ஏற்பு விழா தொடங்கும்.

நண்பகல் 12 மணியளவில் ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதேபோல் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

அதன்பின்னர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் குடி புகுவார். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதுதான் அவரது வீடு.

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசின் பதவி ஏற்பு விழா, அமெரிக்காவின் முன்னணி செய்தி சேனல்கள் அனைத்திலும் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இது தவிர ஜே பைடன் குழுவின் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ‌யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் பதவியேற்பு விழா நேரலை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.