தமிழக மீனவர்களின் 118 படகுகளையும் இலங்கை அரசு விடுவிக்க மறுப்பதால் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையால் இராமேசுவரத்தை சேர்ந்த 48 படகுகள், மண்டபம்-4, புதுக்கோட்டை-25, நாகப்பட்டிணம்-27, காரைக்கால்-9, தூத்துக்குடி-4, தஞ்சாவூர்-1 என 118 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த படகுகள் இலங்கை கடற்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் அதில் பொருத்தப்பட்டிருக்கும் மரக்கட்டைகள் சிதைந்து படகுகள் பழுதாகிக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் 18-க்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டதாக படகு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு விசைப்படகின் விலை 20 இலட்சம் முதல் 30 இலட்சம் இந்திய ரூபாய்கள் வரை ஆகும் என்பதால் படகு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சில படகுகள் விடுவிக்கப்படாமலேயே இருந்து வருகின்றன. இந்த நிலையில், படகுகள் விடுவிக்கப்படாமல் இருப்பதால், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருவதாக படகு உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என, தமிழக ஊடகமான தினமணி செய்தி வௌியிட்டுள்ளது.
இதுகுறித்து தங்கச்சி மடம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறியதாவது:
படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசு காலம் தாழ்த்துவதால் பல படகு உரிமையாளர்கள் மீன்பிடி கூலித் தொழில் செய்ய சென்று விட்டார்கள். அதிக வட்டிக்கு வாங்கி விசைப்படகுகளை இயக்கிய அதன் உரிமையாளர்களை கடன் கொடுத்தவர்கள் வட்டிகளை கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்.
அசலையோ, வட்டியையோ கொடுக்க முடியாமல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, தங்கச்சிமடம் இராஜாநகரைச் சேர்ந்த படகு உரிமையாளரான விக்டர் என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்து விட்டார்.
இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பழுது நீக்கம் செய்ய வேண்டும் என்றாலும் குறைந்தது ரூ. 5 இலட்சம் வரை தேவைப்படும் நிலை இருக்கிறது. இவற்றுக்கு அரசு உதவி செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியும்.
குஜராத் படகுகளை பாகிஸ்தான் சிறைப்பிடித்தால் மீட்பதற்கு ரூ. 10 இலட்சம் வழங்கப்படுவதைப் போல தமிழக மீனவர்களுக்கும் படகுகளை மீட்க அரசு உதவி செய்ய வேண்டும என்றார்.
தங்கச்சிமடம் சவேரியார் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ஜேசு இருதயம் கூறியதாவது:
எனது விசைப்படகு சிறைப்பிடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாவதால் என்னிடம் உள்ள நாட்டுப்படகு மூலம் விசைப் படகுகளுக்கு பொருள்களை எடுத்துச் செல்லும் கூலித்தொழில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.