சூலம் பிடுங்கியெறியப்பட்டு புத்தர் சிலை வைத்து வழிபாடு… குருந்தூர் மலையில் தொல்பொருள் அகழ்வு பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆராய்ச்சி நடவடிக்கைகளை தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை கலாச்சார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தொடக்கி வைத்துள்ளார்.
இன்று (18) காலை குருந்தூர் மலைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சருடன், தொல்பொருள் திணைக்களத்தின் செயலாளர், விரிவுரையாளர் அருண மனதுங்க, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் ரட்ணநாயக்க, தொல்பொருள் திணைக்களம் மற்றம் படை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.
அமைச்சர் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலையில் அடையாளாப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள் இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 160 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குருந்தூர் மலையில், விகாரை அமைக்க முற்பட்ட போது அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.
இதையடுத்து, தமது தொல்பொருள் இடமாக அதை நிறுவி, புத்த விகாரை அமைக்கும் நோக்குடன் அகழ்வராய்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகிறார்கள். பிரதேச மக்களோ, ஊடகவியலாளர்களோ அங்கு அனுமதிக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொல்லியல் துறை செயற்பட்ட போதும், அது இணைக்கப்படவில்லை. இவை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபாடு செய்து வந்த இடத்தில் சூலம் இருந்தது. அது பிடுங்கி எறியப்பட்டுள்ளது. அந்த இடம் துப்பரவு செய்யப்பட்டு, அகழ்வு பணிக்காக சிறிய பெட்டிகளாக அடையாளமிடப்பட்டுள்ளன.அந்த பிரதேசத்தை துப்பர செய்தது, பாதைகளை அமைத்தது உள்ளிட்ட பணிகளை இராணுவமே மேற்கொண்டது.
நேற்று அந்த பகுதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் சென்றபோது ஊடகவியலாளர்கள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இன்றைய நிகழ்விற்கும் ஊடகவியலாளர்களை அனுமதிக்க மாட்டோம் என பொலிசார் கூறிய போதும், இன்று ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஊடகவியலாளர்கள் சென்றபோது, இராணுவத்தினர் அவர்களை வழிமறித்து, விசாரணை செய்தனர். ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்திய போது, தமிழர்களா, சிங்களவர்களா என வினவப்பட்டது.
சூலம் இருந்த இடத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்டு, அந்த இடத்தில் விகாரை வைத்து வழிபாடு செய்யப்பட்டு, தொல்பொருள் ஆராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.