இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் பாவனை குறித்த அறிவிப்பு வெளியானது

286 0

கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசாங்கம் தொடங்கும் என கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கான இருதரப்பு கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு  20 சதவீத மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை இலவசமாக நன்கொடையாக அளிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்புக்கு இது தொடர்பான தேசிய திட்டத்தை சுகாதார அமைச்சகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார.

மேலும் உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு எந்த தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் தேசிய தடுப்பூசி பயன்பாடு இலங்கைக்கு ஒரு அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இதேநேரம், சீன தடுப்பூசிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசியா போன்ற நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கைகளைத்  தொடங்கியுள்ளன.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (என்.எம்.ஆர்.ஏ) ஒப்புதல் அளித்தவுடன் இலங்கை அரசாங்கமும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.