நுவரெலியா – கந்தப்பளை – பார்க் தோட்டத்தில் நேற்றிரவு (17) முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றது.
பார்க் தோட்ட முகாமையாளர் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனையும் தகாத வார்த்தைகளினால் பேசிய சம்பவத்தை அடுத்தே, இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு 7 மணி முதல் தொடர்ச்சியாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
தோட்ட முகாமையாளரின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பொதுமக்கள், முகாமையாளர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் இரண்டு பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பார்க் தோட்டத்தின் மூன்று பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், கொங்கொடியா தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் இவ்வாறு பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அமைதியின்மை நிலவி வருகின்றமையினால், சம்பவ இடத்தில் பொலிஸார், விசேட அதிரடிபடையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அமைப்பதற்கு காணியை வழங்க மறுப்பு தெரிவித்த கந்தப்பளை பார்க் தோட்ட முகாமையாளர், தோட்டத் தொழிலாளர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஷ்வரனையும் தகாத வார்த்தையினால் பேசியுள்ளதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தோட்ட முகாமையாளரின் வீட்டை தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காணிகளை ஒதுக்கீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.