இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் பட்டியல் : அமீரகம் முதலிடத்தை பிடித்தது – ஐ.நா. புள்ளி விவரத்தில் தகவல்

349 0

உலகிலேயே அதிகபட்சமாக அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதாக ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் மக்கள் தொகை பிரிவு அதிகாரி கிளேர் மெனோஜி கூறியதாவது:-

உலக அளவில் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் பரவி வசித்து வருகின்றனர். ஐ.நா. சபையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தற்போது மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் உலகிலேயே அதிகபட்சமாக அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 27 லட்சமும், சவுதி அரேபியாவில் 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்திய மக்கள் தொகை பரவலை பொறுத்தவரையில் மத்திய கிழக்கு நாடுகள், வடக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என அனைத்து பிரதேசங்களிலும் அடர்த்தியாக வசித்து வருவது தெரிய வந்துள்ளது.

மெக்சிகோ மற்றும் ரஷியாவில் தலா ஒரு கோடியே 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதேபோல் சீனாவில் இருந்து ஒரு கோடி பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். சிரியாவில் இருந்து 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களில் அதிக அளவில் அமீரகத்தில் வசித்து வருகிறார்கள். அமீரகத்தை இந்தியர்கள் தங்கள் 2-வது வீடாக கருதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.