டெங்கு தொற்று தீவிரம் – கடும் நடவடிக்கை

331 0

66217_thumbடெங்கு நோய் தொற்று தீவிரமடைந்துள்ள காரணத்தினால் நாடளாவிய ரீதியாக 10 மாவட்டங்களின், 30 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளின் சுகாதார சேவையாளர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துரை, காலி, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 48 ஆயிரம் பேர் டெங்கு தொற்றாளர்களாக காணப்படுகின்றனர்.
77 பேர் தொற்றினால் பலியாகியுள்ளனர்.

இந்தநிலையில் இதுதொடர்பில் நேற்று இரவு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தலைமையில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

அதன்போது சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகளை ரத்துச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டதுடன், அது தொடர்பான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிப்பட்டுள்ளது.

அத்துடன், டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கும் இந்த கலந்துரையாடலில் போது தீர்மானிக்கப்பட்டது.

டெங்கு நுளம்பு குறித்து சோதனை மேற்கொள்ள வருபவர்களுக்கு குடியிருப்பாளர்களிடம் அனுமதி கோர வேண்டும் என்ற சட்டமும் இல்லாது செய்வதற்கும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.