மத்திய வங்கியின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று, மத்திய வங்கியின் புதிய ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் இந்த பதவிக்கு நியமனம் பெற்றதன் பின்னர் நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பின் போது இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இதேவேளை, உட்சந்தை மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க கோடீஸ்வர தமிழரான ராஜ் ராஜரட்னத்தின் கெலியோன் நிறுவனத்திற்கு ஆலோசகராக செயற்பட்டமை தொடர்பில் அவரிடம் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அவர், ராஜ் ராஜரட்ணத்துக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னதாகவே தாம் அவரது நிறுவனத்துக்கு ஆலோசனை வழங்கும் பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
ராஜ் ராஜரட்ணத்தை சசக்ஸ் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே தாம் அறிந்திருந்ததாகவும், இதனால் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாம் இந்த சேவையை அவருக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இது தமது தொழிற்துறை சார்ந்த விடயம் என்றும் இந்திரஜித் குமாரசுவாமி விளக்கமளித்தார்.