சிறிலங்காவின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதியில் இருந்து விமான நிலையத்தை முழுமையாக திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட மாட்டாது என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், விமான நிலையத்தை விட்டு 90 நிமிடங்களில் சுற்றுலாப் பயணிகள் வெளியேறி தாம் பதிவுசெய்துள்ள விடுதிகள், வாடி வீடுகள் ஆகியவற்றிற்குச் செல்லமுடியும் எனவும் சுற்றுலாப் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளாத வண்ணம் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நாளைக்கு மூவாயிரம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்தறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளாக இலங்கைக்கு வர விண்ணப்பிப்பவர்கள் அந்தந்த நாடுகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு தமது உடல் தகுதியை உறுதிப்படுத்தியே இலங்கைக்கு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் இருந்து எவரும் இலங்கைக்கு வர முடியாது எனவும், பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களை இலங்கையில் தரையிறக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.