முதலாளிமார் சம்மேளனம் 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன், இதர கொடுப்பனவுகள் அடங்கலாக 1,105 ரூபா மொத்தச் சம்பளத் தொகையை தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் புதிய யோசனையொன்றை தொழில் அமைச்சிடம் முன்வைத்துள்ளது.
இதனைவிட எந்தவிதத்திலும் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள முடியாதென தோட்டத் துரைமார் சம்மேளனத்தின் தலைவர் பாத்திய புளுமுல்ல தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுகாலம் பூர்த்தியாகியுள்ளது.
அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளுடனும் கடந்த ஒருவருடகாலமாக பல சுற்று பேச்சுவார்த்தைகளை இந்த விடயம் தொடர்பில் நடத்தியிருந்தது.
கடந்த வரவு – செலவுத் திட்ட உரையின் போது ஜனவரி முதலாம் திகதி முதல் கட்டாயம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென பிரதமர் உறுதியளித்திருந்தார்.
அத்துடன், 1,000 ரூபா சம்பள உயர்வை வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கு எதிராக சட்டத்திருத்தத்தின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
என்றாலும் கம்பனிகள் 1,000 ரூபா சம்பள உயர்வுக்கு மறுப்பை வெளியிடுவதால் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்த விடயம் தொடர்பில்
புதிய யோசனையை முன்வைத்தது முதலாளிமார் சம்மேளனம்
பேசப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதலாளிமார் சம்மேளனம் சம்பள உயர்வுக்கான புதிய யோசனையொன்றை தொழில் அமைச்சிடம் கையளித்துள்ளது. இது தொடர்பில் தோட்ட துறைமார் சம்மேளனத்தில் தலைவர் பாத்திய புளுமுல்லவிடம் வினவிய போது,
1,000 ரூபா சம்பள உயர்வை வழங்குவது மிகவும் கடினமாகும். 1,000 ரூபா சம்பள உயர்வை தற்போதைய சூழலில் வழங்க வேண்டுமாயின் ஒரேடியாக 25 ரூபாவை அதிகரிக்க வேண்டியுள்ளது. இது எந்த வகையிலும் சாத்தியப்படாத விடயம். தொழிற்சங்கங்களுக்கும் இது தெரியும். ஆனால், 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துடன் மொத்த சம்பளமாக 1,105 ரூபாவை வழங்குவதற்கான யோசனையை தற்போது தொழில் அமைச்சிடம் வழங்கியுள்ளோம்.
அதில் 700 ரூபா அடிப்படைச் சம்பளத்துக்கு அப்பால் உற்பத்தி கொடுப்பனவாக 150 ரூபாவும் வரவு கொடுப்பனவாக 150 ரூபாவும் ஏனைய ஈ.பி.எப்., ஈ.டி.எப். கொடுப்பனவாக 105ரூபாவும் வழங்கப்படும். இந்த யோசனைக்கு கம்பனிகள் இணக்கம் வெளியிட வேண்டும். அதற்கு அப்பாலான சம்பள உயர்வுக்கு செல்வது கடினமாகும் என்றார்.